வைகையில் தண்ணீர் திறக்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மானாமதுரை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி வாயிலாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வேளாண்மை துறை அலுவலகத்தில் காணொலி வழியாக நடந்த இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.சிபிஎம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி: வைகை அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். பயிர் கடன், நகை கடன் தள்ளுபடி விவரப்பட்டியல் அந்தந்த சங்கத்தின் முன்பு வெளியிட வேண்டும். 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்ட சுப்பன் கால்வாய் திட்டம் ஆட்சி மாற்றத்திற்கு பின் அதுதொடர்பான நடவடிக்கைகள் முழுமையடையாமல் உள்ளது. இந்த கால்வாய் மூலமாக 30க்கும் மேற்பட்ட கிராம கண்மாய்கள் பயன்படுகிறது. அதேபோல் நாட்டார் கால்வாய் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன்: மானாமதுரை வைகை ஆற்றில் கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் குற்றவியல் நடவடிக்கைகள் அதிகம் நடந்து வருகிறது. இதனை ஒழுங்குபடுத்த வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அணை கட்டும் போது இருபக்கமும் சாலை அமைப்பதாக சொல்லி அதை செயல்படுத்தவில்லை. அதனை செயல்படுத்த வேண்டும்.விவசாயி சந்திரசேகர், கால்பிரவு: எங்கள் பகுதியில் விவசாய நிலங்கள் செல்வதற்கு பாதை இல்லாத நிலை உள்ளது. அதற்கு பாதை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதியில் காட்டுபன்றிகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். ராஜகம்பீரத்தில் இருந்து கால்பிரவு வழியாக தீத்தாம்பட்டை, கொம்புகரனேந்தல் செல்வதற்கு உள்ள சாலையை மேம்படுத்த வேண்டும்.விவசாயி மகேந்திரன், செய்களத்தூர்: எங்கள் பகுதியில் உள்ள பெரிய கண்மாய் கரையும் வாய்க்காலும் உடைந்து தண்ணீரை முழுமையாக தேக்க முடியவில்லை. உடைப்பை சரி செய்யாததால் கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் குறைந்து வருகிறது.விவசாயி வெள்ளை, தஞ்சாக்கூர்: 2.5 ஏக்கரில் கேப்பை பயிரிட்டேன். இந்த கேப்பையை அரசு விலையில் விலைக்கு எடுத்து கொள்வதாக சொன்னார்கள். அதை செயல்படுத்த வேண்டும்.விவசாயி அய்யாசாமி, கீழநெட்டூர்: எங்கள் பகுதியில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை பலருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆண்டி:  விவசாயிகள் கேட்டும் குறிப்பிட்ட ரக விதை நெல் உரிய காலத்தில் கிடைக்கவில்லை. தரமான விதைநெல் மூட்டைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு கலெக்டர் பதிலளித்து பேசியதாவது, ‘வைகையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மானாமதுரை வட்டாரத்தில் உள்ள கண்மாய் மராமத்து தொடர்பாக ஆய்வு செய்யப்படும். நாட்டார் கால்வாய் மேம்படுத்த அரசுக்கு நிதி ஆதாரம் கேட்டு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு சங்கங்கள் குறித்து விவசாயிகள் கொடுத்த மனுக்கள் தொடர்பாக 15 தினங்களில் விசாரணை நடத்தி அறிக்கை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….

The post வைகையில் தண்ணீர் திறக்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: