மேடையில் கதறியழுத லிங்குசாமி, ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: திரைப்படக் கலைஞர்கள் எப்போதுமே அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் இயக்குனர் லிங்குசாமியும், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும். நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ‘தி வாரியர்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையேறிய இயக்குனர் லிங்குசாமி, ஒரு நிமிடம் எதுவும் பேச முடியாமல் கண் கலங்கினார். அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் பலர் திகைத்தனர். பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பேசிய லிங்குசாமி, ‘இங்கே என்னை மதித்து கூடியிருக்கும் திரையுலகினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.  எனக்கு 2 கண்கள் மட்டுமே இருக்கிறது. உடம்பு முழுவதும் கண்கள் இருந்திருந்தால், இந்த மேடையைப் பார்த்துவிட்டு உடல் முழுவதும் ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கும். திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். ஹீரோ ராம் பொத்தினேனி, நதியா, ஹீரோயின் கிரித்தி ஷெட்டி, வில்லன் ஆதி, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன். நான் இயக்கிய ‘ரன்’, ‘சண்டக்கோழி’ ஆகிய படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் போல் கிரித்தி ஷெட்டி திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி.  அவருடன் ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இப்போது நாங்கள் குடும்ப நண்பர்களாகி விட்டோம். புதிய படத்தில் ஒப்பந்தமாவது என்றால் கூட, என்னைக் கேட்டுத்தான் கிரித்தி ஷெட்டி முடிவு செய்கிறார்’ என்றார்.கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்துள்ள ‘கார்கி’ படத்தின் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன், படத்தின் இணை தயாரிப்பு பொறுப்பேற்றுள்ள ஐஸ்வர்யா லட்சுமி மேடையில் பேச வந்தபோது, வார்த்தைகள் வராமல் கதறியழுதார். உடனே சாய் பல்லவி ஓடிவந்து அவரைக் கட்டியணைத்து தேற்றினார். பிறகு ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ‘மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளேன். அதில் சேர்த்த பணத்தைக் கொண்டு ‘கார்கி’ படத்தின் மூலம் தயாரிப்பாளரானேன். இப்படத்தை உருவாக்கி முடிப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தேன். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது’ என்றார். தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை விடியாதா’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘பொன்னியின் செல்வன்’, ‘கேப்டன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘தி வாரியர்’ படம் வரும் 14ம் தேதியும், ‘கார்கி’ படம் வரும் 15ம் தேதியும் திரைக்கு வருகின்றன.  …

The post மேடையில் கதறியழுத லிங்குசாமி, ஐஸ்வர்யா லட்சுமி appeared first on Dinakaran.

Related Stories: