மீன்பிடி துறைமுக பகுதியில் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி: காவல் துறை ஏற்பாடு

சென்னை, ஜூன் 18: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.08.2022 அன்று ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வருகிற ஜூன் 26ம் தேதி “சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் நல்வழிபடுத்தும் நோக்கத்தில், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்த, சென்னை காவல், வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, உத்தரவிட்டு, அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொண்டார். மேலும், நேற்று காலை 7 மணிக்கு, மீன் பிடி துறைமுக பகுதியிலுள்ள கசார் மைதானத்தில், சென்னை காவல் துறை சார்பாக 24 அணிகள் பங்கேற்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு வாசகம் அடங்கிய டி-ஷர்ட் மற்றும் தொப்பிகளை வழங்கினார்.

முன்னதாக, காவல் இணை ஆணையர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கிரிக்கெட் போட்டியாளர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர். இந்திய கிரிக்கெட் அணி தேர்வாணைய உறுப்பினர் தரன் சரத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கசார் மைதானம் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மீன், இறால் கழிவுகளை காயவைத்து துர்நாற்றம் வீசக்கூடிய பகுதியாக இருந்தது.

வண்ணாரப்பேட்டை, துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, தலைமையில், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினர் மற்றும் மீனவ சங்கங்கள் சேர்ந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்து இளைஞர்கள் விளையாடும் மைதானமாக மாற்றியமைத்தனர். மேலும்,கிரிக்கெட் போட்டியை இணையதளம் மூலம் யுடியூப்-ல் நேரடியாக காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், பவன்குமார் ரெட்டி, துணை ஆணையர், வண்ணாரப்பேட்டை, லஷ்மணன், கூடுதல் துணை ஆணையர் (நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

The post மீன்பிடி துறைமுக பகுதியில் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி: காவல் துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: