மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக திருவாரூரில் ஏப்.7ல் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக் கழகங்களில், இந்த கல்வி ஆண்டு முதல் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மார்ச் 20ம் தேதி அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத் தளம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருகிறது.  இந்த ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியில் மூன்றரை மணிநேரம் நடைபெறும் இந்த தேர்வில், அனைத்து வினாக்களும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும். எனவே, மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்து உள்ளது. அத்துடன், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு இந்த நுழைவுத் தேர்வில் எந்த மதிப்பும் தரப்படாது என்றும் தெரிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் பயின்று பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மதிப்பற்றதாக ஆக்கி, மாநில அரசின் கல்வி முறையை மதிப்பில்லாமல் ஆக்கும் இந்த நுழைவு தேர்வின் மூலம், மீண்டும் புதியக் கல்விக் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு உள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்த பொது நுழைவுத் தேர்வை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, மதிமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில், மத்திய பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் ஏப்ரல் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக திருவாரூரில் ஏப்.7ல் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: