மதுராந்தகம் பெரிய ஏரியில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டி இருந்த 76 வீடுகள் அதிரடி அகற்றம்: வருவாய் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் பெரிய ஏரியில் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டி இருந்த 76 வீடுகளை, வருவாய் துறையினர், அதிரடியாக அகற்றினர். இதையொட்டி, பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி அருணன்குளம் பகுதியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. விவசாய பாசன ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை, கல் வீடுகள், மாடிகள் கொண்ட கட்டிடங்களில் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து மதுராந்தகம் வருவாய் துறையினர், பெரிய ஏரிக்கரையில் வாசிக்கும் மக்களிடம், தங்களது வீடுகளை அகற்ற வேண்டும் என கூறினர். மேலும், இதுதொடர்பாக, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்பகுதி மக்கள், தங்களுக்கு தகுதியான இடத்தை வழங்கினால் வீடுகளை அகற்றுவோம் என கூறினர். இதையடுத்து அதிகாரிகள், மதுராந்தகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, மதுராந்தகம் நகராட்சி மோச்சேரி பகுதியை ஒட்டி சுமார் ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருப்பது தெரிந்தது. அந்த இடத்தை, வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்நிலையில், மேற்கண்ட அரசு நிலத்தை அளவீடு செய்ய வருவாய் துறையினர் நேற்று காலை சென்றனர். இதை அறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது, அந்த நிலம் தங்களுக்கு விவசாய பயன்பாட்டுக்கும், விளைபொருட்கள் பிரித்தெடுக்கும் களமாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் பகுதியாகவும் உள்ளது. அங்கு வீட்டு மனைகள் அமைக்க கூடாது என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை மீற முடியாது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கவே இடத்தை அளவீடு செய்வதாக கூறினர். அவர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு மதுராந்தகம் கோட்டத்தை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துவிட்டு சென்றனர். முன்னதாக, ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று காலை அகற்றினர். இதை பார்த்த சிலர், தங்களது வீடுகளை காலி செய்து, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது….

The post மதுராந்தகம் பெரிய ஏரியில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டி இருந்த 76 வீடுகள் அதிரடி அகற்றம்: வருவாய் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: