பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 51 டிஎஸ்பிக்களுக்கு பதவி உயர்வு:உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 51 பேருக்கு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 51 போலீஸ் கூடுதல் துணை கண்காணிப்பாளர் பதவியிடங்கள் காலியாக இருப்பதாக உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தமிழக அரசிற்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை பார்த்த தமிழக அரசு, போலீஸ் துறையில் உள்ள 51 கூடுதல் துணை கண்காணிப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப பணி மூப்பு பெயர் பட்டியலை போலீஸ் டி.ஜி.பி.யிடம் கேட்டது.

பணிமூப்பு பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, பணி மூப்பு அடிப்படையின் பேரில் 16 பேர் மட்டுமே ஏ.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற தகுதியாக இருந்தனர்.

அதாவது, பதவி உயர்வு பெற குறைந்தது 4 வருடங்கள் டி.எஸ்.பி.க்களாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் 4 வருடங்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி வகித்தவர்கள் குறைந்த அளவே இருந்ததால் மீதமுள்ள 35 பேரை நியமனம் செய்ய சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்ப டி.ஜி.பி.யிடம் இருந்து பெயர் பட்டியல் பெற்று, அந்த பட்டியலை தமிழக கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.பின்னர் தமிழக கவர்னர் ஒப்புதலின்படி சில சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பதவி உயர்வுக்கு கட்டாயமாக பணியாற்ற வேண்டிய விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, தற்போது டி.எஸ்.பி.க்களாக பணியாற்றி வரும் பி.குமார், ஜெ.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ஏ.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் சட்டத்தில் உள்ள சிறப்பு விதிமுறைகளின் படி, தற்போது டி.எஸ்.பி.க்களாக உள்ள 33 பேருக்கு ஏ.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, தற்போது டி.எஸ்.பி.க்களாக பணியாற்றி வரும் 51 பேருக்கு ஏ.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து தற்காலிக பதவி உயர்வு பட்டியலை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

 இந்த பெயர் பட்டியலில் யாருக்கும் ஆட்சேபனை இருப்பின் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், 2 மாதங்களுக்குள் இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தமிழக உள்துறை செயலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.        

Related Stories: