போதை மாத்திரை, கஞ்சா அறவே ஒழிக்கப்படும்

கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: மாநகரில் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் கோவை மாநகரில் சாலை விபத்து எண்ணிக்கையும், உயிர்ப்பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இது, இன்னும் குறைக்கப்பட வேண்டும். குற்ற வழக்குகளில் இருந்து விடுதலையாகி, வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உளவுப்பிரிவினர் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும். மாநகரில், கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் அறவே ஒழிக்கப்படும்.

இதற்கு காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்க, பள்ளி, கல்லூரிகள் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அந்தந்த காவல்நிலையங்களில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மணுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். ரவுடிகள் அட்டகாசத்தை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இவர்களது ஊடுருவல் பற்றி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு அறிவுரை வழங்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், துணை கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

 

The post போதை மாத்திரை, கஞ்சா அறவே ஒழிக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: