புழல் சிறையில் பெண் கைதிகள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் பங்க்: விரைவில் திறக்க ஏற்பாடு

 

சென்னை: தமிழக சிறை துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க் மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பெட்ரோல் பங்க் மூலம் சிறை துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர். இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ.1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்க்கை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர். ‘இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்’ என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளது.

The post புழல் சிறையில் பெண் கைதிகள் மட்டுமே நடத்தும் பெட்ரோல் பங்க்: விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: