புதையல் இருப்பதாக கூறி வியாபாரி வீட்டில் 12 அடி ஆழம் பள்ளம் தோண்டிய மந்திரவாதி

* உதவியாளர்களுடன் கைது* பெரம்பலூர் அருகே பரபரப்புபெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி வியாபாரி வீட்டில் 12 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டிய மந்திரவாதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் அருகே நொச்சியம் ஊராட்சி விளாமுத்தூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் பிரபு(45). இவரது மனைவி செல்வி(38). இவர்களுக்கு பிரபாவதி(15) என்ற மகளும், தேவராஜ்(12) என்ற மகனும் உள்ளனர். ஐஸ், மாம்பழ வியாபாரியான பிரபு நாளடைவில் மாந்திரீகம், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இந்நிலையில் நண்பரான திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூரை சேர்ந்த பிரபாகரன்(39) என்பவரிடம் தனது குடும்ப கஷ்டங்கள் பற்றி பிரபு புலம்பியுள்ளார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண பிரபுவை, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த மாயவனை வழிபடும் மந்திரவாதியான கிருஷ்ணமூர்த்தியிடம்(52) பிரபாகரன் அழைத்து சென்றார். அங்கு பிரபுவின் பெயர், ராசி, நட்சத்திரத்தை கேட்டு கொண்டதோடு, உனக்கு அதிர்ஷ்டம், உன் காலுக்கடியிலேயே இருக்கிறது. அதாவது நீ வசிக்கிற பூமிக்கு அடியிலேயே புதையல் இருக்கிறது. அதை நீ ரகசியமாக கைப்பற்றினால் ராஜயோகம் தான். அதை எடுத்துத்தர ரூ.50 ஆயிரம் செலவாகும் என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதை நம்பிய பிரபு, மந்திரவாதியை தனது வீட்டுக்கு வந்து புதையலை தோண்டி எடுத்து தருமாறு கூறியதுடன் அட்வான்ஸ் தொகையாக ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.இதைதொடர்ந்து மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி, தனது உதவியாளர்களான சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த வெள்ளியங்கிரி, நாகம்மாள், துறையூரை சேர்ந்த குமார், லோகநாதன், மணிமாறன், வேலு உள்ளிட்ட 8 பேருடன் விளாமுத்தூருக்கு கடந்த 19ம் தேதி வந்தார். பின்னர் அங்கேயே 8 பேரும் தங்கியிருந்து வீட்டின் பின்புறம் உள்ள சமையலறையில் இரவு நேரத்தில் மதுபாட்டில்களுடன், கோழிகளை காவு கொடுத்ததோடு யாகம் நடத்தி புதையலை தோண்டும் பணிகளை மேற்கொண்டனர். இதற்காக பகலில் யாகம் நடத்துவதும், இரவில் புதையலை தோண்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கிணறு வெட்ட பயன்படுத்தப்படும் டிரில்லர் கருவியை கொண்டு மின்விளக்கு வசதியுடன் 2 நாளில் 12 அடி ஆழத்துக்கு மேல் பள்ளத்தை தோண்டினர். இதில் தண்ணீர் தான் ஊற துவங்கியது. ஆனால் பிரபு எதிர்பார்த்த புதையல் கிடைக்கவில்லை. இதையடுத்து பள்ளம் தோண்டும் பணியை வியாபாரி பிரபு நிறுத்துமாறு கூறினார். ஆனால் அதை கேட்காமல் புதையல் எடுத்து தருகிறேன் என்று கூறி மந்திரவாதி தொடர்ந்து பள்ளம் தோண்டினார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து எஸ்பி மணி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு பிரபு வீட்டுக்கு பெரம்பலூர் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்(பொ) செந்தில்குமார், எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் சென்றனர். பின்னர் வியாபாரி பிரபு, மந்திரவாதி உட்பட 9 பேரையும் பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின்பேரில், ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது, சாமி பெயரை சொல்லி வீட்டை சிதைத்தது, கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து மந்திரவாதி கிருஷ்ணமூர்த்தி, பிரபுவின் நண்பர் பிரபாகரன், மந்திரவாதியின் உதவியாளர் வெள்ளியங்கிரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கூலி வேலைக்கு வந்ததாக கூறி மற்ற 5 பேரை விடுவித்தனர்….

The post புதையல் இருப்பதாக கூறி வியாபாரி வீட்டில் 12 அடி ஆழம் பள்ளம் தோண்டிய மந்திரவாதி appeared first on Dinakaran.

Related Stories: