சேலம் சரகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்: ஒன்று முதல் 10 அடியில் விற்பனைக்கு தயார்

சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சாலை மற்றும் தெருக்களில் அரை அடி முதல் 15 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம். இந்நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், சுண்டல், சர்க்கரை பொங்கல், கரும்பு, பழவகைகள் வைத்து பக்தர்கள் படையலிடுவார்கள். தொடர்ந்து 2 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். மூன்றாம் நாள் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லிலும் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகித கூழலால் விநாயகர் சிலைகள், சாக்பீஸ் தூள், களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு அடி முதல் பத்து அடி வரையுள்ள சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

ஒரு சிலை உயரத்தை பொறுத்து ₹100 முதல் ₹15 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம், ராஜஅலங்காரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, 5 தலை நாகத்தின் மீது சயன விநாயகர், சிவநர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்கம் வாகனம், அனுமன், நரசிம்மர், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும்பட்சத்தில் சேலத்தில் உத்தமசோழபுரம், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகளின் விற்பனை தற்போது 10 முதல் 20 சதவீதம் நடந்து வருகிறது. பண்டிகை நெருங்கும் நேரத்தில் 60 முதல் 70 சதவீத சிலைகள் விற்பனையாகும். இவ்வாறு தயாரிப்பாளர்கள் கூறினர்.

The post சேலம் சரகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்: ஒன்று முதல் 10 அடியில் விற்பனைக்கு தயார் appeared first on Dinakaran.

Related Stories: