பாலியல் பாதிப்புகளுக்கு ஆளாகும் பெண்கள் தபாலில் புகார் தரலாம்: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

துரைப்பாக்கம்: பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் தங்களை, பிறருக்கு அடையாளப்படுத்தி கொள்ளாமல், தபால் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தினை அடையாறு துணை கமிஷனர் கானத்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பெண் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில்கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பெண்களின் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மீதான புகார்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மகளிர் காவல் நிலைய புகார்கள் மீதான விசாரணைகளுக்கு சட்டம் – ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளும் உதவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, கமிஷனர் உத்தரவின்பேரில், அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் கானத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு, கரிகாட்டுகுப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாலியல் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும், பெண் குழந்தைகள் சந்திக்க நேரிடும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாமல் தபால் மூலமாக அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும், அடையாறு துணை கமிஷனர் அலுவலகம் முகவரி அச்சிடப்பட்ட தபால் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மியூசிக்கல் சேர், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்கள் மற்றும்  பங்குபெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை அவர் வழங்கினார்….

The post பாலியல் பாதிப்புகளுக்கு ஆளாகும் பெண்கள் தபாலில் புகார் தரலாம்: துணை கமிஷனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: