பருப்பு, பாமாயில் டெண்டருக்கு தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கரூர்  மாவட்டம் தாந்தோன்றிமலையைச் சேர்ந்த மணிகண்டன் ஐகோர்ட் மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 2  கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சீனி மற்றும்  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை சப்ளை செய்வதற்கான  டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனத்திற்கு திறன், உட்கட்டமைப்பு, அனுபவம்,  ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளது. கடந்த பிப்ரவரி 25ல் நடந்த  இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஏலத்திற்கு முந்தைய நிபந்தனைகள்  கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  ஆனால்,  ஏப்ரல் 26ல் 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதலுக்கும் மே 5ல் பாமாயில்  பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கும் இ-டெண்டர் அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல், பல தளர்வுகள்  செய்யப்பட்டு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முந்தைய  நிபந்தனைப்படி டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் கடைசி 3 ஆண்டுகளில் ஆண்டு  வருமானம் ரூ.71 கோடியாக இருக்க வேண்டும். புதிய நிபந்தனைப்படி, கடைசி 3  ஆண்டுகளில் ரூ.11 கோடி இருந்தால் போதும். ரூ.2 கோடிக்கு அதிகமுள்ள  டெண்டருக்கு 30 நாள் அவகாசம் இருக்க வேண்டும். தற்போதைய டெண்டருக்கு 6 நாள்  மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளனர். எனவே, பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்  அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். முந்தைய நிபந்தனை படி புதிதாக  அறிவிப்பு வெளியிடுமாறு உத்தரவிட  வேண்டும் என்று கோரியுள்ளார்.  அரசு  தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வீரகதிரவன், ‘‘கொரோனா பேரிடர் காலத்தின்  அவசர நிலையை கருத்தில் கொண்டே அறிவிப்பு வெளியானது. முந்தைய நிபந்தனைகள்படி  குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை இருந்தது.  தகுதியுள்ள பலரும் பங்கேற்றிடும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. மனு  செய்துள்ள இருவரும் டெண்டருக்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே, அவர்கள் மனு  செய்ய முடியாது’’ என வாதிட்டார். வழக்கை விசாரித்த  நீதிபதி, டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.  இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்  நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு  வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

The post பருப்பு, பாமாயில் டெண்டருக்கு தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: