பதற்றமானது என்று அறிவித்த கோவை 95வது வார்டில் பிரசாரத்துக்கு அனுமதி கோரிய பாஜ நிர்வாகிக்கு அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகராட்சி தேர்தலில் 95வது வார்டில் பிரசாரம் செய்ய அனுமதி மறுத்ததாகக் கூறி பாஜ தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராஹிமின் மனுவை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மைச் செயலாளர் சையது இப்ராஹிம் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல, கோவை மாநகராட்சியில் 95வது வார்டில் பிரசாரம் செய்யச் சென்ற தன்னை ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் அதனால் தன்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க கூடாது என்று உத்தரவிடக் கோரியும் சையது இப்ராஹிம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதற்றமான பகுதிகளில் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என கடிதம் அனுப்பியும் அதை மீறி பிரசாரம் செய்ததாக சையது இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இந்த விவரங்களை மனுவில் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அபராத தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post பதற்றமானது என்று அறிவித்த கோவை 95வது வார்டில் பிரசாரத்துக்கு அனுமதி கோரிய பாஜ நிர்வாகிக்கு அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: