நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1374 உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர் இடங்கள், 490 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர் இடங்கள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. கடந்த 4ம் தேதி மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவுற்றது. இதையடுத்து மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,361 பேர் என மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வேட்புமனு தாக்கல் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனை அனைத்தும் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) மூலம் பதிவு செய்யப்பட்டது. ஒரு சில சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் இன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்குள் வேட்பாளர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். அதைப்போன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜ மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி ஆண்கள் 1,696, பெண்கள் 1,847, திருநங்கை 3 பேர் என மொத்தம் 3,546 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 3,546 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்த நிலையில் 228 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3,318 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்று கொள்ளலாம். அதைத்தொடர்ந்து மாலை சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: