நகரின் முக்கிய பகுதிகளை எளிதாக அடையும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: நகரின் முக்கிய பகுதிகளை எளிதாக அடையும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆலந்தூர், நந்தனம், ஆயிரம்விளக்கு, வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு அருகில் 2ம் கட்ட பணிகளின் போது இதுபோன்ற ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இரண்டு கட்டங்களிலும் உள்ள நிலையங்கள் எளிதாக அணுகுவதற்காக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கப்படும். 118.9 கிமீ தொலைவிலான 2ம் கட்ட பணிகள் 2025ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆலந்தூரில் தற்போது உள்ள ரயில் நிலையத்திற்கு பின்னால் 2ம் கட்ட ரயில் நிலையம் அமைக்கப்பட்டு இதை இணைக்கும் விதமாக நடைமேம்பாலம் அமைக்கப்படும். அதேபோல் கீழ்ப்பாக்கத்தில், கேஎம்சி மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையின் கீழே ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள நிலத்தடி ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை வழியாக புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையம் இணைக்கப்படும். விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களை அடைய, போரூர், பூந்தமல்லி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் போன்ற மேற்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இவை மாறுதல் ரயில் நிலையங்களாக செயல்படும். மூலக்கடை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு, பெரம்பூர் மற்றும் அயனாவரம், கீழ்ப்பாக்கம் மற்றும் ஆயிரம்விளக்கு ஆகிய ரயில் நிலையங்கள் மாறுதல் நிலையங்களாக இருக்கும்.அதேபோல் நந்தனம் மற்றும் வடபழனி ஆகியவை திருவான்மியூர் மற்றும் தரமணி போன்ற தெற்கு புறநகர் பகுதிகளுக்கு மாறுவதற்கு நிலையங்களாக இருக்கும். அதே நேரத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளவர்கள் போக்குவரத்து மையங்களுக்குச் செல்ல ஆலந்தூரில் உள்ள ரயில் நிலையத்தில் மாறலாம். தி.நகரில் ஷாப்பிங் செய்ய பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தை அடைய விரும்புபவர்கள் நந்தனம் அல்லது வடபழனியில் பாதைகளை மாற்றலாம். 2ம் கட்ட பணிகளில் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையமும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள  ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக ஒரு தனி ரயில் நிலையத்தை நாங்கள் கட்ட மாட்டோம். அதற்கு பதிலாக, நாங்கள் 2ம் கட்ட பாதைகளை தற்போது இருக்கும் ரயில் நிலையத்துடன் இணைப்போம். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போதுள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் 2ம்  கட்ட நிலையங்களை உருவாக்குவதால், ஏழு இடங்களில் பாதைகளை மாற்றி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை  பயணிகள் எளிமையாக அடையலாம. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்….

The post நகரின் முக்கிய பகுதிகளை எளிதாக அடையும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: