திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

திருச்சி, ஆக.24: திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு நேற்று உணவு பாதுகாப்புதுறை அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
திருச்சியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடைகள் குறித்து அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த அதிரடி ரெய்டை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை, தென்னூர் ஹைரோடு பகுதியில் ஒரு காபி நிலையம், துரைசாமிபுரத்தில் இருக்கும் டீக்கடை மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பீடா ஸ்டால் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை ஆணையர் லால்வேனாவின் தடையாணை உத்தரவின்படியும், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, பொன்ராஜ், ஸ்டாலின் மற்றும் வசந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும், பதுக்கி வைப்பதும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006ன்படி குற்றமாகும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபடுவோர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என எச்சரிக்கப்படுகின்றனர் என்றார்.

மேலும் பொதுமக்கள் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தெரிந்தால் அதற்கான புகார் எண்ணில் புகார் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்:99449 59595, 95859 59595 மற்றும் மாநிலம் தழுவிய புகார் எண்ணான 94440 42322 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: