அமையபுரம் ஊராட்சியில் குவாரி உரிமத்தை ரத்து செய்யுங்கள்

திருச்சி. ஜூலை 2: அமையபுரம் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் இயங்கி வரும் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். கலெக்டர் பிரதீப்குமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமையபுரம் ஊராட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் இயங்கி வரும் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

அம்மனுவில் தெரிவித்திருந்ததாவது:
கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி தொடங்கியதில் இருந்து அமையபுரம் கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். எனவே கிராமமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த குவாரியின் உரிமைத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கடிதத்தையும் மனுவுடன் இணைத்து கலெக்டரிடம் கொடுத்தனர்.

The post அமையபுரம் ஊராட்சியில் குவாரி உரிமத்தை ரத்து செய்யுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: