50% மானிய உதவியில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

திருச்சி, ஜூன் 26: திருச்சி மாவட்ட கிராமப்புறங்களில் 2024-25ம் ஆண்டில், 50% மானியத்தில் 250 கோழிகள் கொண்ட நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவும் திட்டத்தில் பயன்பெற கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். கிராமப்பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் சிறிய அளவில் 250 கோழிகள் கொண்ட நாட்டுக்கோழி பண்ணைகள் 50% மானியத்தில் அமைக்கும் திட்டம் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 3 முதல் 6 தொழில் முனைவோர் அல்லது பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கான தகுதிகள்: நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச்செலவு, தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் கோழி வளரும் 4 மாதத்துக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றின் மொத்த செலவில் 50% மானியமாக (₹ ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 875) மாநில அரசால் வழங்கப்படும். திட்டத்தின் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி வாயிலாகவோ (அ) தனது சொந்த ஆதாரமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து பெற்றுத்துரப்படும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.

இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2022-23ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகள் பயனடைந்திருக்க கூடாது. கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளையும் பயனாளிகளே செய்துகொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்திற்கு இத்திட்டத்தின்கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமும் உள்ள மூன்று முதல் ஆறு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் பயனாளிகளிடம் இருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமைய இருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விபரம்/வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 ஆண்டுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியன அளிக்க வேண்டும். எனவே நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவும் திட்டத்தில் பயன்பெற கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post 50% மானிய உதவியில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: