திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி. ஜூன் 29: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விவசாயிகள் தற்போது திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பல மேம்பாட்டு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதற்காக முதலில் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர். மேலும் பருவமழை தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அதேபோல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள ஏரி குளங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை முழுமையான நீர் ஆதாரமாக மாற்றி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பூ.விசுவநாதன் பேசுகையில். நெல்லுக்கு ஊக்கதொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மக்காசோள உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு ரூ.30 கோடியை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் நெல்லுக்கு கொள்முதல் நிலையங்கள் அமைப்பது போல் மக்கா சோளத்திற்கும் அரசே கொள்முதல் செய்ய மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வராததால் 12 லட்சம் ஏக்கரில் விவசாயம் பொய்த்துபோனது. இந்த வருடமாவது சம்பாவுக்கு தேவையான நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுதர வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஊராட்சிகளில் உள்ள குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பேசுகையில். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் ராணிமங்கம்மாள் சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி – திண்டுக்கல் சாலையில் கருமண்டபத்தில் இருந்து அல்லித்துறை, அதவத்தூர், எட்டரை, ஒத்தகடை, கோப்பு, கல்லுகாடு, கரூர் மாவட்டம் முதலைபட்டி, மேட்டுகாடு, குறிச்சி, நங்கவரம், ஆரியம்பட்டி, குமாரமங்கலம், மாயனூர் முடக்கு சாலை வழியாக மாயனூர் சுங்கசாவடி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இணையும். ராணிமங்கம்மாள் சாலையை 4 வழி சாலையாக அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும்.

இச்சாலையில் இருபுறமும் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் வாழை, கரும்பு, பருத்தி, உள்ளிட்ட விளை பொருள்களை கோவை, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற வௌி மாநிலங்களுக்கும் விரைந்து கொண்டு செல்ல முடியும். எனவே இந்த சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பாரதீய கிசான் சங்கம் தமிழ்நாடு சார்பில் பேசிய மாநில செயலாளர் வீரசேகரன் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனை செய்ய அரசு உத்தரவிட வேண்டும். பொதுப்பணித்துறை சார்பாக மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள், மதகுகள் சீர்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் “பி” மற்றும் “சி” வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நெல்லுக்கான ஊக்கதொகையை ஓடிசாவில் அறிவித்த ரூ.3100 போல தமிழக அரசம் அறிவிக்க வேண்டும். அதேபோல் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு அரசு அறிவித்துள்ளது. இயந்திர நடவு செய்தால் மட்டுமே மானியம் என்பதை மாற்றி அனைவருக்கு வழங்கிட வேண்டும்.

பருவ காலத்தில் மின் இணைப்பை நம்பி, ஆழ்துறை கிணறுகள் மூலமாக சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு தமிழக அரசு உர மானியம் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும். இந்தாண்டுக்கான மின் இணைப்பு 1.69 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்கு வட்டங்கள் வாயிலாக ஒதுக்கீடு குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். தட்கல் மின் இணைப்பு குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் வனத்துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காவல் துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்ற வளாக நுழைவாயிலில் உள்ள நீர்வள ஆதார அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை கண்டித்தும் சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தில் பாஜவினரை விட்டு தாக்குவது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தாக்கிய எஸ்.ஐ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் கூட்ட அரங்கிற்குள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில் கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவாக தேக்கி வைத்துவிட்டு 15ஆயிரம் ஏரிகளை வெட்டி அதில் தண்ணீரை தேக்கி 90ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்த கர்நாடகா இன்று 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிறது. ஆனால் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்த தமிழகம் தற்போது 10 லட்சம் ஏக்கர் கூட சாகுபடி செய்வதில்லை. எனவே தமிழக முதல்வர் கர்நாடக அரசிடம் 1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்றுதர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளார்.

The post திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: