தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு 2வது முறையாக தேசிய தர அங்கீகாரம்: இந்திய தர நிர்ணய குழுமம் வழங்கியது

தாம்பரம், மே 8: தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு என்.ஏ.பி.எச் எனும் மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரத்தை தொடர்ச்சியாக 2வது முறையாக டெல்லியில் உள்ள இந்திய தர நிர்ணய குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் அதன் செயலர் வைத்ய.ராஜேஷ் கோடேசா தலைமையில், சிறப்பு செயலர் பிரமோத் குமார் பாடக் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் என்.ஏ.பி.எச். தலைமை நிர்வாக அதிகாரி அதுல் மோகன் கோச்சர், இயக்குனர் மற்றும் அதன் உயர் அதிகாரிகள், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தலைமையிலான மருத்துவமனை கண்காணிப்பாளர், கூடுதல் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் தலைமை செவிலியர் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினரிடம் என்.ஏ.பி.எச் மறு அங்கீகார சான்றிதழை ஆயுஷ் அமைச்சக செயலர் மூலம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் சேவைகள், தினசரி நோயாளிகளின் வருகை எண்ணிக்கை, சராசரி மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அகில இந்திய அளவில் மிகவும் முதல் தரமாக உள்ளதாக ஆயுஷ் செயலர் பாராட்டி, அனைவரையும் இந்நிறுவனத்தை அவசியம் வந்து பார்க்கும்படி வலியுறுத்தினார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவ நிறுவனங்களைக் காட்டிலும், இந்நிறுவனம் மிகவும் நல்ல முறையில் செயல்படுவதாகவும் ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியில், என்.ஏ.பி.எச். தலைமை நிர்வாக அதிகாரி அதுல் மோகன் கோச்சர் பேசுகையில், இம்மருத்துவமனையின் சேவைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் இருப்பதாகவும், மக்கள் பணியில் அரிய பல செயல்கள் ஆற்றுவதாகவும் கூறி, வாழ்த்தினார். தொடர்ந்து, சித்த மருத்துவத்திற்காக நாட்டிலேயே உயரிய அமைப்புகளாக திகழும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஒன்றிய சித்த மருத்துவ ஆய்வு குழுமம் ஆகியவற்றின் முறையே பொதுக் குழு, நிர்வாகக் குழு கூட்டங்கள் வரும் 9ம் தேதி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் நடைபெறவிருக்கின்றது. இதற்காக ஆயுஷ் அமைச்சக செயலர், சிறப்பு செயலர், கூடுதல் செயலர், நிதி ஆலோசகர், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் போன்ற உயர் அதிகாரிகள், உயர் பொறுப்பு வகிக்கும் சித்த மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வருகின்றனர். இந்த கூட்டங்களில் இவ்விரு அமைப்புகளின் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த விவாதங்கள், முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சித்த மருத்துவ முறையை நாடெங்கிலும் முன்னெடுக்கத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

The post தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு 2வது முறையாக தேசிய தர அங்கீகாரம்: இந்திய தர நிர்ணய குழுமம் வழங்கியது appeared first on Dinakaran.

Related Stories: