தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குடியாத்தத்தில் பரபரப்பு போலி பெண் டாக்டர் கைது சம்பவம்

குடியாத்தம், ஆக.28: குடியாத்தத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா(24). தம்பதிக்கு 7, 3 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரியங்காவிற்கு கடந்த 20ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக அவரது குடும்பத்தினர் பிச்சனூர் பேட்டை பகுதியில் இயங்கி வந்த கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு பிரியா என்ற டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.

அப்போது ஊசி போடப்பட்ட நிலையில் பிரியங்கா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை, உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்து, குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஈடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதற்கிடையில், பிரியங்காவிற்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் போலி எனவும், தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. அதனடிப்படையில், கடந்த 21ம் தேதி சுகாதாரத்துறையினர் மற்றும் குடியாத்தம் டவுன் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து கிளினிக்கில் அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அதில், டாக்டர் பிரியா நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதியானது. தொடர்ந்து, அதிகாரிகள் கிளினிக்கில் இருந்த மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த போலி டாக்டர் பிரியாவை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை ஈடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட பிரியங்காவின் உடலை வருவாய்த்துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கேயே உடலை வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்பு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் உடலை அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்குதியில் பரபரப்யை ஏற்படுத்தியது.

The post தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குடியாத்தத்தில் பரபரப்பு போலி பெண் டாக்டர் கைது சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: