தண்டவாளம் பராமரிப்பு பணியால் ரயில்கள் 4 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி காட்பாடி ரயில் நிலையத்தில்

வேலூர், ஜூன் 18: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய மார்க்கமாக கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலம் திருப்பதி, ஐதராபாத், விஜயவாடா என பல பகுதிகளுக்கு ரயில்கள் போக்குவரத்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையம் அருகே திருப்பதி மார்க்கமாக செல்லும் ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் முடிந்து தண்டவாளம் மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தண்டவாளம் மாற்றும் பணி குறித்து ரயில்வே அதிகாரிகள் திருப்பதி மார்க்கமாக செல்லும் ரயில்களின் லோகோ பைலட்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தனர். தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கியதால் ரயில்வே சிக்னல்கள் துண்டிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்தது. சிக்னல் இல்லாததால் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. நடு வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதனால் திருவனந்தபுரத்தில்-ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் அடைய வேண்டும். ஆனால் 6 மணி நேரம் தாமதமாக அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. அதேபோல் கொல்லம்-காசிகுடா எக்ஸ்பிரஸ், ஹவுரா- பெங்களூர் எக்ஸ்பிரஸ், ஐதராபாத்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் தாமதமாக காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காலை 7 மணிக்கு முடிவடைந்த நிலையில் வழக்கம்போல் காட்பாடி ரயில் நிலைய மார்க்கமாக செல்லும் ரயில்கள் நேரத்திற்கு சென்றன. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

The post தண்டவாளம் பராமரிப்பு பணியால் ரயில்கள் 4 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி காட்பாடி ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: