சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்: தயாநிதி மாறன் எம்பி தலைமையில் நடந்தது

சென்னை: சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் தயாநிதி மாறன் எம்பி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. குழுவின் தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், மயிலை த.வேலு, ஆர்.டி.சேகர், தாயகம் கவி, டாக்டர் எழிலன், இ.பரந்தாமன், ஜெ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சங்கர்,  ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, அசன் மவுலானா, ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் இரா.மூர்த்தி, வெற்றி அழகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் விஜயா ராணி, குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குநர் விஜயராஜ்குமார் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், சென்னை மாவட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தயாநிதி மாறன் எம்பி அளித்த பேட்டியில், ‘சென்னையில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் பகுதிகளில் முடிவு பெறாமல் உள்ள திட்டங்களை உடனடியாக முடிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது வரை மத்திய அரசு வழங்கிய நிதிகள் உரிய முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால் தான், தற்போது சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது,’ என்றார்.மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில், ‘சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்க 3 திட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முடிவு பெறாத திட்டங்களை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்,’ என்றார்….

The post சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்: தயாநிதி மாறன் எம்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: