சாலை விபத்தில் தந்தை உயிரிழந்ததால் கல்வியை தொடர முடியாமல் பரிதவிக்கும் மாணவிகள்: அரசு உதவி செய்ய கோரிக்கை

 

திருவொற்றியூர், டிச.11: சாலை விபத்தில் தந்தை உயிரிழந்ததால் கல்வியை தொடர முடியாமல் அவதிப்படும் மாணவிகள், தங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மணலி புதுநகர் சின்ன ஈச்சங்குழி, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (52). இவருக்கு கோமதி என்ற மனைவியும், ரேஷிகா, ரஷிகா என்ற 2 மகள்களும் உள்ளனர். வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த தாமோதரன், கடந்த மாதம் 28ம் தேதி பணி முடிந்து இரவில் பைக்கிள் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். பொன்னேரி நெடுஞ்சாலை கொண்டகரை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாமோதரனின் மனைவியும், 2 மகள்களும் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகினர். தாமோதரனுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆதரவற்ற அந்த குடும்பத்தை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதியுதவி வழங்கினர். மேலும் தந்தை இறந்ததால் சிறுமிகள் ரேஷிகா, ரஷிகா ஆகிய இருவரும் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களின் கல்வி தடை படாமல் இருக்க தமிழக அரசு உதவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலை விபத்தில் தந்தை உயிரிழந்ததால் கல்வியை தொடர முடியாமல் பரிதவிக்கும் மாணவிகள்: அரசு உதவி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: