கோவை மேற்கு மண்டல பகுதியில் 2 மாதத்தில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 5 லாரிகள் உள்பட 8 வாகனங்களுடன் 10 பேர் கைது

சேலம்: கோவை மேற்கு மண்டல பகுதியில் கடந்த 2 மாதத்தில் 5 லாரிகள் உள்பட 8 வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 26,400 லிட்டர் கலப்பட டீசலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், சங்ககிரி, நாமக்கல், திருச்செங்கோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. கூடுதல் டிஜிபி ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் ஸ்டாலின், பாஸ்கர் மேற்பார்வையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். சேலம், நாமக்கல் மாவட்ட பகுதியில் டிஎஸ்பி ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளை மறித்து சோதனையிட்டனர். அதில், சங்ககிரி, சேலம் சீலநாயக்கன்பட்டி, நாமக்கல் தொட்டிப்பட்டி, முத்தாலப்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் டேங்கர் லாரிகள், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட கலப்பட டீசல் லோடுகளை பறிமுதல் செய்தனர். சங்ககிரியில் கடந்த 13ம் தேதி, 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை லாரியுடன் பறிமுதல் செய்து, அதனை விற்பனைக்காக கொண்டு வந்த திருப்பூரை சேர்ந்த உரிமையாளர் இன்பராஜ், டிரைவர் மதியழகன், கிளீனர் செல்வம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கடந்த 5ம் தேதியில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் 1,350 லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். சங்ககிரியில் கடந்த 6ம் தேதி, 3 டேங்கர் லாரிகளில் கலப்பட டீசல் கொண்டுவரப்படுவது கண்டறியப்பட்டு, அந்த 3 லாரியையும் மடக்கி பிடித்தனர். அந்த லாரிகளில், 17,050 லிட்டர் கலப்பட டீசல் இருந்தது. அதனை பறிமுதல் செய்து, லாரி உரிடையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர், பழனிசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 மாதத்தில், கோவை மேற்கு மண்டலத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 5 லாரிகள், 3 மினி லாரிகளுடன் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, இதேபோல் கலப்பட டீசல் கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி ஆபாஸ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

The post கோவை மேற்கு மண்டல பகுதியில் 2 மாதத்தில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 5 லாரிகள் உள்பட 8 வாகனங்களுடன் 10 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: