கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை: ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பு பல்டி..!!

சென்னை: கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பு பல்டி அடித்துள்ளது. கோவையில் அக்டோபர் 31ம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பிரச்சனையை முன்வைத்து பந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது. விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுள்ள நிலையில் பந்த்துக்கு அவசியமில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் அவசர மனுத்தாக்கல் செய்தார். மனுவில், கடைகளை அடைத்து பந்த்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று வியாபாரிகளை பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாகவும், பந்த் நடத்துவது கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை தரப்பு திடீர் பல்டி அடித்தது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பந்த்-க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 31ம் தேதி கோவையில் முழு அடைப்பு தன தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை என அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்கிற தனி நபர்தான். அவரின் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.  இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோவையில் அக்டோபர் 31ல் பந்த் நடத்தினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்….

The post கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை: ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பு பல்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: