ஓடிடி உரிமம் மூலம் பல கோடி அள்ளும் தமிழ் படங்கள்

சென்னை: ஓடிடி நிறுவனங்கள் சமீபத்தில் வெளியான மற்றும் வெளியாக உள்ள படங்களை வாங்கியதில் அந்த படங்கள் ரூ.700 கோடி வரை வசூலித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஓடிடி நிறுவனங்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன. நேரடியாக ஓடிடியில் வெளியான படங்களும் தியேட்டரில் வெளியாகிவிட்டு ஓடிடிக்கு வந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இதனால் படங்களின் தியேட்டர் உரிமத்துக்கு இணையாக ஓடிடி உரிமம் விற்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது. படத்தின் பூஜை போடப்பட்டதும், ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான படங்களுக்கும் ஓடிடியில் திரையிட கடும் போட்டி நிலவியது. அந்த வகையில் அந்த படங்கள் பல கோடிகளை ஓடிடி உரிமம் விற்று சம்பாதித்துள்ளன. ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் தியேட்டர்களில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை பார்த்தது. இதனால் இந்த படத்துக்கு ஓடிடி உரிமமும் அதிக விலைக்கு பேசப்பட்டது. நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து ரூ.280 கோடிக்கு இதன் ஓடிடி உரிமத்தை பெற்றனர். இதேபோல் தியேட்டர்களில் 1000 கோடியை வசூலித்த மற்றொரு படமான கேஜிஎஃப் 2, அமேசான் ப்ரைம் மூலம் ரூ.160 கோடிக்கு விலைபோனது. இதேபோல் தமிழ் படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் படம் தியேட்டர்களில் ரூ.300 கோடி வரை வசூலிக்க, இதன் ஓடிடி உரிமத்தை ரூ.60 கோடிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியது. வரும் 30ம் தேதி வெளியாகும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் ரூ.60 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. இதேபோல் ரிலீசாவதற்கு முன்பே தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரூ.36 கோடிக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரூ.34 கோடிக்கும் அமேசான் ப்ரைமுக்கு விற்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பல தமிழ் படங்களை அதிக விலைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இங்கு குறிப்பிட்டுள்ள 7 படங்களின் மூலம் ரூ.705 கோடியை அந்தந்த பட தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் விக்ரம், பொன்னியின் செல்வன், கேப்டன் மில்லர், மாவீரன் ஆகிய தமிழ் படங்கள் மட்டுமே ரூ.180 கோடி வசூலித்துள்ளது. தியேட்டரில் வெளியாகிவிட்டு, ஓடிடிக்கு வருவதால் இந்த தொகை கிடைத்திருக்கிறது. நேரடியாக ஓடிடியில் வெளியானால் இதைவிட கூடுதல் தொகையை இந்த படங்கள் பெற்றிருக்கும்….

The post ஓடிடி உரிமம் மூலம் பல கோடி அள்ளும் தமிழ் படங்கள் appeared first on Dinakaran.

Related Stories: