உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிட நல மாணவிகள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம்: மாமல்லபுரம் சென்றனர்

சென்னை, அக்.12: உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணமாக ஆதி திராவிட நல மாணவிகள் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில், வில்லிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள் மாமல்லபுரத்திற்கு ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர். இதற்கான சுற்றுலா பேருந்தை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

மாணவிகள் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் பாறை, ஐந்து ரதங்கள் ஆகிய வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றுலா வழிகாட்டியின் விரிவான விளக்க உரையுடன் பார்வையிட்டனர். சுற்றுலா சென்ற மாணவிகள், தங்கள் தோழிகளுடன் சேர்ந்து உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட ஏற்பாடு செய்ததற்காக தமிழ்நாடு முதல்வருக்கும், சுற்றுலாத் துறைக்கும் நன்றி தெரிவித்தனர். சுற்றுலாப் பயண வழியனுப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிட நல மாணவிகள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம்: மாமல்லபுரம் சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: