உயர் அதிகாரிகளுடனான கூட்டம் திடீர் தள்ளிவைப்பு தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்று முக்கிய முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக இருந்த கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனாலும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை, நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 1,700 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுதினம் (23ம் தேதி) காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வருகிற 23ம் தேதி முதல் தமிழகத்தில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடக்கிறது.கூட்டத்தில், ஆகஸ்ட் 23ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளாக என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார். குறிப்பாக தமிழகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதிக்கலாமா, மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கலாமா, நீண்டநாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகளை எந்த தேதியில் இருந்து திறக்கலாம் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை இன்று மாலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்….

The post உயர் அதிகாரிகளுடனான கூட்டம் திடீர் தள்ளிவைப்பு தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்று முக்கிய முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: