இருளர் பெண்கள் பலாத்கார வழக்கு கைதான இன்ஸ்பெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அட்மிட்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமுதாயத்தை சேர்ந்த சிலரை கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திருக்கோவிலூர் போலீசார், தி.மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமுதாயத்தை சேர்ந்த 4 பெண்களை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, திருக்கோவிலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் னிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமை காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ளிட்ட 5 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வழக்கு விழுப்புரத்தில் உள்ள எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய போலீசார் 4 பேர் ஏற்கனவே ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், தற்போது அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் னிவாசன் மட்டும் ஜாமீன் பெறவில்லை. இந்நிலையில், தலைமறைவான அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் விழுப்புரம் எஸ்சிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியஜோதி முன்னிலையில் நேற்று சரணடைந்தார். தொடர்ந்து அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, நீதிபதிடம் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அவரை கைது செய்ய  உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, திருக்கோவிலூர் போலீசார் அவரை கைது செய்து அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….

The post இருளர் பெண்கள் பலாத்கார வழக்கு கைதான இன்ஸ்பெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: