ராணுவம், விமானம், கடற்படைகளுக்கு 22 ஆயிரம் கோடிக்கு டிரோன் கொள்முதல்

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து  22,200 கோடி செலவில் 30 ஆளில்லா ஆயுத விமானங்களை முப்படைகளுக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் போரின் போது, உயரமான மலைப்பகுதி, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, வேவு பார்க்க, தாக்குதல் நடத்த விமானிகள், ராணுவ வீரர்களுக்கு பதிலாக, ஆயுதம் கொண்ட டிரோன்களை அனுப்பும் உத்தியே நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையே, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி நரவானே கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நாட்டின் முப்படைகளுக்கும் தலா 10 ஆயுத டிரோன்கள் வீதம் ₹22,200 கோடி செலவில், 30 டிரோன்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்ட்ஸ் ஆஸ்டின் அடுத்த வாரம் இந்தியா வரவிருக்கும் நிலையில், இதற்கான பேச்சுவார்த்தை முடிவாகும் என தெரிய வந்துள்ளது.

* எம்.க்யூ-9 ரீப்பர் எனப்படும் இந்த வகை ஆயுத டிரோன்களில் உள்ள சென்சார், ரேடார்கள் மூலமாக இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.

* இவை 1,700 கிலோ எடை ஆயுதங்களை சுமந்து கொண்டு, தொடர்ந்து 27 மணி நேரத்துக்கு மேலாக பறக்கும் திறன் கொண்டவை.

* இந்த டிரோன்கள் 6,000 கடல் மைல்கள் தூரம் செல்லும்.

* 55 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் தன்மை உடையவை.

Related Stories: