சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப்காரில் 5.70 லட்சம் பக்தர்கள் சென்று தரிசனம்

சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சோளிங்கர் நகராட்சி உள்ளது. ஆன்மிகம், வரலாறு மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட புனிதத் தலமான லட்சுமி நரசிம்மர் கோயில் சோளிங்கரில் அமைந்துள்ளது.

இந்நகரம் திருக்கடிகை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சோளிங்கரின் முக்கிய அடையாளமாக மட்டுமல்லாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய அடையாளமாகவும் உள்ளது.

இத்திருக்கோயில் 750 அடி உயர ஒரே குன்றாலான பெரியமலையின் உச்சியில் அமைந்துள்ளதுடன், அருகிலுள்ள சிறியமலையில் யோக ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. இந்த இரு மலைக் கோயில்களுக்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

அண்மைக் காலத்தில் அரசு ரோப் கார் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் எளிதாக மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடிகிறது. அதன்படி இதுவரை சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் ரோப்கார் மூலம் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஆன்மிகச் சிறப்புடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் (டிவிஎஸ்) கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. விவசாயத்திலும் சோளிங்கர் தனித்துவம் பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் மற்றும் இயற்கை எழில் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமைமிகு ஆன்மிக நகரமாகவும் அடையாளமாகவும் உள்ளது.

கி.பி. 1781-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஹைதர் அலி படையினருக்கும் இடையே நடந்த போரில் இறந்த மைசூர் வீரர்களின் நினைவாக கட்டப்பட்ட கஞ்சா சாகிப் கல்லறை சோளிங்கரில் உள்ள முக்கிய நினைவு சின்னமாக உள்ளது.

Related Stories: