மதுராந்தகம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 534 மில்லி மீட்டர் தண்ணீர் ஆவியாகியுள்ளது: ஆய்வில் தகவல்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக நீர்நிலைகளில் இருந்து 534 மில்லி மீட்டர் தண்ணீர் ஆவியாகியுள்ளது. மழையின் அளவு கடந்த 4 மாதத்தில் 86.8 மி.மீ மட்டுமே பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக மழை இன்றி கடுமையான வறட்சி நிலவி வருகிறது. காலை சூரிய உதயம் முதல் மாலை அஸ்தமனம் வரை கடுமையான வெயில் நிலவுவதால் ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வறண்டு போய் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் சுட்டெரிக்க தொடங்கியது. மார்ச், ஏப்ரலில் வறண்ட வானிலையுடன் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கோடை காலத்தில் மதுராந்தகம் பகுதியில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாக குறைந்தது.

இதனால், பகல் நேரங்களில் 39 மீட்டர் வேகத்தில் அனல் காற்று வீசியது. கோடை முடிவடைந்தும் ஜூன், ஜூலை மாதத்தில் இதே நிலை நீடித்து வருவதால் பருவ மழையின்போது நிரம்பிய ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலையில் தினமும் 5 மில்லி மீட்டர் அளவிற்கு தண்ணீர் ஆவியானது. கடுமையான வெயில் காரணமாக நீர் நிலைகள் மற்றும் நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை மழையை நம்பி விவசாயம் செய்த நெற்பயிரும் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.

வானிலை குறித்து மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முழு வானிலை மையத்தில் சூரியனின் வெப்ப நிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், நீர் ஆவியாதல், காற்றின் திசை, காற்றின் வேகம் போன்ற வானிலையின் அம்சங்களை நவீன கருவிகள் மூலம் வானிலை ஆய்வாளர்கள் தினமும் காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என 2 முறை ஆய்வு செய்து தகவல்களை சேமித்து வருகின்றனர். மேலும், இணைய வழியாகவும் சென்னை வானிலை மையத்தில் இருந்தபடியே தானியங்கி முறையில் இப்பகுதியில் நிலவும் வறட்சி வானிலையை கண்காணித்து வருகின்றனர்.

அதன்படி மதுராந்தகம் பகுதியில், ஏப்ரல் மாதத்தில் 148 மில்லி மீட்டர், மே மாதத்தில் 136 மில்லி மீட்டர், ஜூன் மாதத்தில் 140 மில்லி மீட்டர், ஜூலை மாதத்தில் 24ம் தேதி (நேற்று) 110 மில்லி மீட்டர் தண்ணீர் ஆவியாகியுள்ளது. ஆக மொத்தம் 534 மில்லி மீட்டர் தண்ணீர் ஆவியாகியுள்ளது. ஆனால் மழையின் அளவு 86.8 மில்லி மீட்டராக மட்டுமே பதிவாகியுள்ளது இதனால் ஆவியாவது அதிகரித்துள்ளது, மழைப்பொழிவு மிகவும் குறைந்துள்ளது. மழையை பொருத்தவரை, ஏப்ரல் மாதம் 7 ம்தேதி 14 மிமீ, மே மாதம் 8ம்தேதி 13 மிமீ, 9 ம்தேதி 23 மிமீ, 10 ம்தேதி 0.5மிமீ, 16ம் தேதி 7மிமீ, 18ம் தேதி 1மிமீ, 20ம் தேதி 0.5மிமீ, ஜூன் 3ம் தேதி 3 மிமீ, 4ம் தேதி 1 மிமீ, 17ம் தேதி 8.2 மிமீ, 27ம் தேதி 12.6 மிமீ, ஜூலை 18ம் தேதி 1மிமீ, 19ம் தேதி 1மிமீ என மொத்தம் 4 மாதங்களில் 13 நாட்களில் மட்டும் 86.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தினமும் வானிலை மையத்தில் ஆய்வு
மதுராந்தகம் அருகே உள்ள மேலவளம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தில் மின்னணு வெப்பநிலை கருவி, காற்றின் ஈரப்ப தத்தை அறியும் ஹைட்ரோ மீட்டர், காற்றின் வேகம் அரிய உதவும் அனிமோன் மீட்டர், காற்றின் திசை காட்டி, பனிப்பொழிவு அளவீடு, சூரியன் எத்தனை மணி நேரம் பிரகாசிக்கிறது என்பதை அறியும் கேம்ப்பெல் ஸ்டோக்ஸ் ரெக்கார்டர் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி தினமும் வானிலை ஆய்வு செய்யப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு
கடந்த 4 மாதங்களில் 13 நாட்கள் மட்டும் மில்லிமீட்டர் அளவிலான குறைந்த மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் ஊராட்சிகள்தோறும் குடிநீர் வழங்கும் கிணறுகளும் வற்றியது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு கிராமப்புறங்களில் நிலவி வருகிறது.

Related Stories: