வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் நீதிமன்றங்களில் 60 வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய அளவிலான எந்தவொரு மோசடியும் நடக்கவில்லை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. மேலும், பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட வாக்கு மறுமதிப்பீடு, தணிக்கை மற்றும் டிரம்பின் சொந்த நீதித்துறை அமைச்சகம் நடத்திய விசாரணைகளிலும் தேர்தல் மோசடி குறித்த எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் முதல், சீன மக்கள் குடியரசு அரசு, அமெரிக்க வாக்காளர்களின் 220 மில்லியன் கோப்புகளை சட்டவிரோதமாகக் கைப்பற்றி, வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல் தரவு வேலைகளை பார்த்துள்ளது. இந்த தரவு திருடப்பட்டது என்பது முன்னெப்போதும் இல்லாத தேர்தல் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ‘நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தும் முக்கிய உளவுத்துறை தகவல்களை உடனடியாக வெளியிடப் போகிறேன். வாக்காளர் தகுதி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும். எனது உரையை நேரடி ஒளிபரப்பு செய்ய மறுத்த ஏபிசி மற்றும் என்பிசி போன்ற ஊடகங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.
