துபாய்: ஈரான் மீது அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகளையும் அழித்து விடுவதாக ஈரான் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மீண்டும் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை சமீபத்திய தாக்குதல்களில் ஈரானில் 35 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5வது நாளாக நேற்று முன்தினம் இரவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் வடக்கு ஈரானிலும் தாக்குதலை அமெரிக்கா விரிவுபடுத்தி உள்ளது. தலைநகர் டெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளும் தாக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மற்றும் விண்வெளித் திட்டத்தின் தாயகமான செம்னான் மாகாணத்தை அமெரிக்கத் தாக்குதல்கள் குறிவைத்ததாகவும் அது தெரிவித்தது. நேற்று காலை ஹமேதான், ஹோர்மோஸ்கான், குசெஸ்தான், லோரெஸ்தான், மார்கஸி மற்றும் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல்கள் நடந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவை வானிலேயே அழிக்கப்பட்டதாக ஜோர்டான், குவைத், கத்தார் நாடுகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, வார் ரூமில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் வாரத்தில் ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்படும் என அறிவித்துள்ளார். இது ஈரானை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது.
ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி அளித்த பேட்டியில், ‘‘ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களைத் தாக்கக்கூடும் என்ற அதிபர் டிரம்ப்பின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தும்.
ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் இப்பகுதியின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் தகர்த்து விடும். எந்தச் சூழ்நிலையிலும், எந்த வகையிலும், அந்நிய நாடான, பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக்கோடு’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவும் ஈரானும் மோதலை கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
* ஈரானுக்கு சென்ற கப்பலை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
பாரசீக வளைகுடாவில் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவை நோக்கிச் சென்ற குராசோ நாட்டு கொடி ஏற்றப்பட்ட பெல்மா என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தது. அந்தக் கப்பல் பல எச்சரிக்கைகளை புறக்கணித்ததை தொடர்ந்து, அதன் புகைபோக்கிக்குள் ஏவுகணையை செலுத்தி அமெரிக்க ராணுவம், கப்பலை செயலிழக்க செய்தது. இது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்துவதற்கு பதிலடியாக அமெரிக்காவின் முற்றுகை தீவிரமடைந்திருப்பதை காட்டுகிறது.
* இந்திய மாலுமிகளை பணியமர்த்த வேண்டாம்
மத்திய கிழக்கில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அடுத்த உத்தரவு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்துவதை தவிர்க்குமாறு கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (டிஜிஎம்ஏ) உத்தரவிட்டுள்ளது. பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களின் கேப்டன்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க டிஜிஎம்ஏ அறிவுறுத்தி உள்ளது.
