இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை விட அதிக சக்திவாய்ந்தவராக முப்படை தளபதி ஆசிம் முனீர் உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட அவரை அழைத்து விருந்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரான், அமெரிக்கா போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையிலும் ஆசிம் முனீர் ஈடுபட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் தொகை தொடர்பான உயர்மட்டக் குழுவில் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை சேர்க்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரும், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவருமான மௌலானா பஸ்லுர் ரஹ்மான், அந்நாட்டு ராணுவத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அரசியலில் பங்காற்ற விரும்பினால், ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நீங்கள் அரசியலில் ஈடுபட விரும்பினால், சீருடையைக் கழற்றிவிட்டு அரசியலுக்கு வாருங்கள். தேர்தலில் போட்டியிடுங்கள். அப்போது சீருடையில் இருக்கும் ஒருவருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கின்றன என்பதை நாங்கள் பார்க்கிறோம். யாருக்கு வேண்டுமானாலும் ஆட்சியை வழங்கும் அதிகாரமும், யாரிடமிருந்து வேண்டுமானாலும் ஆட்சியைப் பறிக்கும் அதிகாரமும் உங்களிடம் உள்ளது. யார் அரசாங்கத்தை அமைப்பது, யார் வெளியேறுவது என்பதைத் தீர்மானிப்பது ராணுவத்தின் வேலை அல்ல. இவ்வாறு பேசினார்.
