அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகை; மத்திய கிழக்கின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக நிறுத்துவோம்: ஈரான் துணை ராணுவம் மிரட்டல்

துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து கடந்த சில நாட்களாக மீண்டும் இரு தரப்பும் மோதலை தொடங்கி உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை இரு தரப்பும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஈரானை மீறி ஓமன் கடல் பகுதியை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முடங்கியிருக்கும் நிலையில், பதில் நடவடிக்கையாக அமெரிக்க கடற்படை ஈரான் மீதான தனது முற்றுகை நடவடிக்கையை நேற்று முன்தினம் தொடங்கியது. அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் துறைமுகத்திற்கு செல்லவோ வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அமெரிக்க போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதலில் 7 ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சஹாபர் துறைமுகத்தின் கண்காணிப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ஜோர்டான், பக்ரைன், குவைத் மீது ஈரான் ஏவுகணைளை ஏவியது.

ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கிக் கொள்ளாவிட்டால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியை நிறுத்துவோம். இப்பகுதியிலிருந்து எண்ணெய், எரிவாயு அனைவருக்கும் இருக்கும் அல்லது யாருக்கும் இருக்காது’’ என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 87 டாலராக நேற்று அதிகரித்தது.

* 35 பேர் பலி: 300 பேர் காயம்
ஈரான் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் பாத்திமா மொகஜெரானி அளித்த பேட்டியில், ‘‘சமீபத்திய நாட்களில் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரானில் 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை நடந்த தாக்குதலில் மட்டும் 300 பேர் காயமடைந்துள்ளனர்’’ என்றார். சமீபத்திய அமெரிக்காவின் தாக்குதலில் ஒரே நாளில் 260 பேர் காயமடைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: