வாஷிங்டன்: போரை காலவரையறையின்றி நீட்டிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரான் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் கடந்த 6, 7ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்தது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் புகழ்பெற்ற போட்காஸ்டர் ஜோ ரோகன் உடனான நேர்காணலில் ஈரானுடனான போரை நீட்டிக்க இஸ்ரேல் திட்டமிட்டு செயல்படுவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்க வெளியுறவு கொள்கையை தங்களுக்கு சாதகமாக மாற்றி, ஈரானுடனான போரை எந்த ஒரு தெளிவான இலக்கும் இன்றி காலவரையறையின்றி நீட்டிக்க இஸ்ரேல் திட்டமிட்டு செயல்படுகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதை தடுக்க, இஸ்ரேல் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய சில பிரிவினர் அமெரிக்காவில் ரகசிய இணைய பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக கசிவுகள் மூலம், அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தை மாற்ற திட்டமிட்ட அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் மூலம் அமெரிக்காவை மீண்டும் ஒரு நீண்ட கால போருக்குள் தள்ள இஸ்ரேல் அமைப்பில் உள்ள சிலர் முயல்வது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது’ என்றார்.
அதே நேரத்தில் தன் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலளித்த அவர், “என்னை விமர்சிப்பவர்கள் நரகத்திற்கே போகலாம் அமெரிக்க வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது. பிற நாடுகளின் அழுத்தங்களுக்கு பணியாமல், அமெரிக்க மக்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொண்டு நான் தொடர்ந்து செயல்படுவேன்” என்றார்.
