அரூர்: ரயிலில் பாய்ந்து காதல் ஜோடி, தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-திருப்பத்தூர் ரயில் மார்க்கத்தில், மொரப்பூர்-தொங்கனூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆவலம்பட்டி பிரிவு சாலை அருகே ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கால்துண்டான நிலையிலும், இளம்பெண் தலை துண்டாகியும் இறந்து கிடந்தனர்.
சற்று தள்ளி, ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பைக் எண்ணை கொண்டு விசாரித்ததில் அவர்கள், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எட்டிப்பட்டி கிராமம் அழகிரிநகரை சேர்ந்த கன்சிராம்ராணா (21), அதே ஊரைச்சேர்ந்த அறிவுஜோதி (16) என்பது தெரியவந்தது. கன்சிராம்ராணா தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து பாதியில் நிறுத்தியுள்ளார். அறிவுஜோதி, அரூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்தது தெரியவந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், இருவரும் நேற்று அதிகாலை வேளையில் சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(42). இவரது மனைவி சிந்து(38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சந்திரகுமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. 2 நாட்களுக்கு முன்பு சந்திரகுமார், சிந்து இருவரும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நஸ்ராபூர்- திருவண்ணாமலை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. அருகே கிடந்த கடிதத்தில், ‘உடல் நல பாதிப்பால் கடன் பிரச்னை ஏற்படும் என்பதால் தற்கொலை செய்துகொள்கிறோம்’ என எழுதப்பட்டிருந்தது.
