2026ம் ஆண்டு காவலர் தேர்வு நடத்தப்படாதது பெரும் அநீதி: அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: 2026ம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது, காவல்துறை பணியில் சேர காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும்அநீதியாகும். காவலர் பணிக்கான உடற்தகுதிக்காக 6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும்.

2026ம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகதால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின் அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.

2025ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து உடனடியாக வெளியிட வேண்டும். 2026ம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories: