தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

சென்னை : தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி தயார் செய்த அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு விதித்துள்ளது. குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளம் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகளில், பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  அடிக்கடி கலர் அப்பளம், கலர் வடாம் சாப்பிட்டால் புற்றுநோய் கூட வருவதற்கு வாய்ப்புள்ளது.

இவை செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்று புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்த தரம் குறைந்த ரசாயனங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவன சிதறலையும் உண்டாக்கும் ஆபத்தும் உள்ளது.

எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சி வளாகங்களில் இந்த கலர் அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது. தயாரிப்பாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விதிகளுக்கு புறம்பாக நிறமூட்டிகளை பயன்படுத்தி அப்பளம் விற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: