சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்குமாறு சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இருவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது. சபாநாயகர், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனம் மற்றும் இயற்கை நியதிகளுக்கு எதிரானது. இந்த மனு மீது இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்களுக்கு சட்டமன்ற செயலாளர் மற்றும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். ஏற்கனவே, நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
