விழுப்புரம்: மாவட்ட செயலாளர் பசுபதியை தாக்க முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளித்தது தொடர்பாக அவரது மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஏற்கனவே விழுப்புரம் நகர செயலாளராக இருந்த பசுபதி, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் நகரம், ஒன்றியம் வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த கூட்டங்களில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் புகுந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சி.வி.சண்முகத்தின் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மயிலம், வல்லம் ஒன்றிய கூட்டங்களில் சண்முகத்தின் ஆதரவாளர்கள், பசுபதி நடத்தும் கூட்டங்களில் புகுந்து இடையூறு ஏற்படுத்தினர். கடந்த 11ம் தேதி வல்லம் ஒன்றிய அதிமுக கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மாவட்ட செயலாளர் பசுபதியை கல்லால் தாக்க முயற்சி செய்தனர்.
மேலும் அங்கு இரு தரப்பும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை கலைத்தனர். அண்மையில் சி.வி.சண்முகம் மற்றும் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூண்டுதலின்பேரில் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் பசுபதி, எஸ்பியிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவியை பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் எழில்ராஜ்,
வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்(எ) கிருஷ்ணன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
