*நிவாரண நிதி வழங்க விவசாயிகள் கோரிக்கை
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த சென்னசமுத்திரம் மேட்டூர் கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை இல்லாததால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 70 ஏக்கர் நெற்பயிர் காய்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சித்திரை மாதத்தில் விதை விதைத்து ஆவணியில் அறுவடைக்கு வரக்கூடிய பயிர் சொர்ணவாரி பட்டம். இந்த நெல் பயிரை 4 மாதமாக குழந்தை போல் இரவு பகல் வெயில் என்று பாராமல் வளர்த்து வந்தோம்.
வளர்ந்து நல்ல நிலைக்கு வரும்போது நெல் மணிகள் முதிர்ச்சி அடையும்போது திடீரென்று 10 நாட்களாக தண்ணீர் இல்லாததால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து உலர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு மன உளைச்சலும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நெற்பயிரை நம்பி உள்ள எங்களுக்கு விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. அடுத்த பயிர் சம்பா வைக்க பணமும் இல்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெற்பயிரை பார்வையிட்டு போதுமான நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
