திரிணாமுல் காங். தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்: ரிதப்ரதா பானர்ஜி கோஷ்டி அதிரடி

 

* புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கியுள்ள அதிருப்தியாளர்கள் கோஷ்டி, கட்சியின் புதிய தலைவராக அரூப் ராயை தேர்ந்தெடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்று விட்டனர். மேலும் 20 எம்பிக்களும் அந்த பிரிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிருப்தியாளர்கள் குழுவை சேர்ந்த ரிதப்ரதா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கி முடிவெடுக்கப்பட்டது. கட்சி தலைவராக எம்எல்ஏ அரூப் ராய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், எம்எல்ஏக்கள் ஃபிர்காத் ஹக்கீம், ரதின் கோஷ், சபீனா யாஸ்மின் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவை எதிர்க்கட்சி தலைவரான ரிதப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் கட்சியின் பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏ அக்ருஸ்ஸமான் அன்சாரி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அமைப்பு சட்டங்களின்படி தேசிய செயற்குழு புதுப்பிக்கப்படாததால், சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிருப்தியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. புதிய அணியில் மம்தா பானர்ஜி இணைந்தால், அவர் கட்சியின் தலைமை ஆலோசகராக செயல்படலாம் என ரிதப்ரதா பானர்ஜி கூறி உள்ளார்.

Related Stories: