புவனேஷ்வர்: ஒடிசாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். ஒடிசாவில் மார்ச் மாதம் 16ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சிக்கு எதிராக வாக்களித்ததாகவும் கூறி எதிர்க்கட்சிகளான பிஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. தொடர்ந்து இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பிஜேடி கட்சியின் தலைமை கொறடா பிரமிளா மல்லிக் தனது கட்சியின் 8 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவர் ராம சந்திர கதம் தனது கட்சியின் மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். பிஜேடியின் மனுக்கள் குறித்து ஒடிசா சட்டப்பேரவை சபாநாயகர் சுராமா பதி வெளியிட்ட அறிவிப்பில்,‘‘மனுக்கள் தெளிவற்றதாகவும், ஆதாரமற்றதாகவும் உள்ளன.
வாதத்திற்காக அதன் உள்ளடக்கங்கள் விசாரிக்கத் தகுதியானவை என்று வைத்துக்கொண்டாலும் கூட அவற்றின் தகுதித்தன்மையை ஆராய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ நிபந்தனைகளை அவை பூர்த்தி செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
