ஐதராபாத்தில் நீட்தேர்வின்போது கழிவறையில் அமர்ந்து செல்போனில் விடை தேடிய மாணவர் சிக்கினார்: கைது செய்து போலீசார் விசாரணை

 

திருமலை: ஐதராபாத்தில் நீட்ேதர்வின்போது வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்று செல்போனில் விடை தேடிய மாணவர் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த அடிபட்லாவில் உள்ள ராகன்னகுடா மாவட்ட உயர்நிலைப்பள்ளி மையத்தில் நீட் தேர்வு நடந்தது. தேர்வின்போது தேர்வர்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தேர்வறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தேர்வு எழுத தொடங்கினர். சிறிது நேரத்தில் தேர்வர் ஒருவர், கடுமையாக வயிறு வலிப்பாக கூறி கழிவறைக்கு சென்றார்.

ஆனால் நீண்ட நேரம் கழித்தும் திரும்பாததால், சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர்கள், கழிவறைக்கு சென்று தேர்வரை அழைத்தனர். அப்போது அவர் தனது செல்போனில், கூகுள் குரோம் மூலம் நீட் தேர்வில் கேட்கப்பட்ட பதில்களை தேடியது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாணவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மாணவன் காலை 7 மணிக்கு தேர்வு மையத்திற்குள் நுழைந்து, தனது மொபைல் போனை ஒரு ஜிப்லாக் உறையில் வைத்து கழிவறையின் ப்ளஷ் டேங்க்கில் மறைத்து வைத்துள்ளார்.

காலை 6 மணி மற்றும் 11 மணிக்கு ஊழியர்கள் நடத்திய இரண்டு கட்ட சோதனைகளிலும் மொபைல் போன் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவர் வயிறு வலிப்பதாக கூறி செல்போன் பயன்படுத்தி விடை தேடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: