மும்பை: உத்தவ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பிக்கள் 6 பேர், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தனர். இதன் மூலம், மகாராஷ்டிரா அரசியலில் நிலவிய ஆபரேஷன் டைகர் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. புதிதாக சேர்ந்த எம்பிக்களுடன் சேர்த்து, சிவசேனா கட்சியின் எம்பிக்கள் பலம் 13 ஆகவும், உத்தவ் கட்சி எம்பிக்கள் பலம் 3 ஆகவும் ஆகியுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியில் மொத்தம் 9 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 6 பேர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு தாவுவதாக கடந்த வாரம் தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கூட்டிய கட்சி கூட்டத்தில் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் 6 எம்பிக்களும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், அவர்கள் ராஜஸ்தானில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. உத்தவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரை ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் புது வியூகத்தை ஷிண்டே வகுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என எம்பி சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், ஓம்பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவுசாகேப் வக்சவுரே ஆகிய அதிருப்தி எம்பிக்கள் 6 பேரும், மும்பையில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இதன் மூலம், ஏறக்குறைய 2 வாரங்களாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
‘ஆபரேஷன் டைகர் வெற்றி’
உத்தவ் கட்சி எம்பிக்கள் 6 பேர் சிவசேனாவில் இணைந்ததை தொடர்ந்து நிருபர்களிடம் கட்சி தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: இந்த மக்களவை உறுப்பினர்கள் இப்போது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளைப் பின்பற்றும் உண்மையான சிவசேனாவில் இணைந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தேன். இப்போது நான் ஒரு சிக்சர் (6 எம்பிக்கள்) அடித்துள்ளேன். 2022ம் ஆண்டு நான் எடுத்த முடிவு பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளையும் சிவசேனாவையும் காப்பாற்றுவதாக இருந்தது. இப்போது மக்களவை எம்பிக்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சிவசேனாவின் விரிவாக்கத்தின் 2வது கட்டமாகும். ஆபரேஷன் டைகர் இப்போது முழுமையாக நிறைவு பெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது, என்றார்.
