20 ஆண்டுகளாக தலைமறைவு; நேபாளத்தில் பதுங்கிய 2 பேர் அதிரடி கைது: வங்கி நிதி முறைகேடு வழக்கில் சிபிஐ அதிரடி

 

புதுடெல்லி: வங்கி நிதி முறைகேடு வழக்கில் 20 ஆண்டுகளாக நேபாளத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. மகாராஷ்டிரா தன்பாத்தில் உள்ள எஸ்பிஐ கிளையிலிருந்து கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ரூ. 1.25 கோடிக்கும் அதிகமான தொகையை முறைகேடாகக் கையாண்டது தொடர்பான வழக்கில், பிரிஜ்பூஷன் பிரசாத் மற்றும் கர்தார் சிங் ஆகியோர் சிபிஐயால் தேடப்பட்டு வந்தனர். இதையடுத்து இருவரும் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டதுடன்,

அவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 25,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. மேலும் அவர்கள் மீது இன்டர்போல், ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் அவர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தியா வந்திருந்த அவர்கள் 2 பேரும் சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபர்கானில் பிரசாத் கைது செய்யப்பட்டார். அதேவேளையில், சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் வைத்து கர்தார் சிங் கைது செய்யப்பட்டார்.

Related Stories: