சென்னை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.78,326 கோடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள தவெக அரசு, இனிமேல் எப்படி நிதி மேலாண்மை செய்யப்போகிறது என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்கு பின்னரும் முந்தைய அரசு மீது புகார் கூறியே தவெக அரசு நாட்களை நகர்த்த முடியாது.
நிதிநிலையை காரணம் காட்டி, தேர்தல் பிரசாரத்தின் போது அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தவெக அரசு சொல்கிறதா. தமிழக அரசின் நிதி மேலாண்மை திட்டம் என்ன என்பதை விளக்கும் செயல் திட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும். நிதிச்சுமையை சரி செய்வதற்கான வழிகள் என்ன, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இருக்கும் திட்டம் என்ன என்பதையெல்லாம் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை தவெக அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
